பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்து வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற இரண்டு பேர் திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினர்!
சென்னைக்கு அடுத்தபடியாக சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலில் திருச்சி ஏர்போர்ட் இருந்து வருகிறது.இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் மலேசியாவுக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அப்துல் காஸ்மி (51) என்பவர் பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மற்றும் இடம் ஆகியவற்றில் திருத்தம் செய்து மலேசியா செல்ல இருந்தது தெரியவந்தது. இதேபோல் சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளையும் இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் நெடுவயல் காயம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவர் பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மற்றும் இடம் ஆகியவற்றில் திருத்தம் செய்து சிங்கப்பூர் செல்ல இருந்தது தெரிய வந்தது. இதை எடுத்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் இரண்டு பேரையும் ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Comments are closed.