திருச்சியில் கோவில் திருவிழாவிற்காக பிளக்ஸ் பேனர் வைப்பதில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை-சாலை மறியல்…* போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு..! (வீடியோ இணைப்பு)
திருச்சி, தென்னூரில் உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம்தோறும் குட்டி குடித்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில், சாமி அருள் பெற்ற மருளாளி 100க்கும் மேற்பட்ட ஆட்டுக் குட்டிகளின் ரத்தத்தை குடித்து அருள்வாக்கு கூறுவார். குட்டிகுடி திருவிழா தென்னூர் மந்தையில் நடைபெறும். இதனால், திருவிழாவுக்கு 5 நாட்களுக்கு முன்னதாக தென்னூர் மந்தையில் பல்வேறு தரப்பினர் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படும். இந்தநிலையில் திருவிழாவிற்கு இன்னும் 15 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் தற்போது தென்னூர் மந்தையில் பேனர்கள் வைத்துள்ளனர். அடுத்த மாதம் 1ம் தேதி திருவிழா நடைபெற உள்ள நிலையில் , இப்போது எதற்காக பேனர் வைத்துள்ளீர்கள் இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஒரு சில பேனர்கள் அகற்றப்பட்டன. பேனரை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்பேரில் சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் சிபின் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தென்னூர் மந்தை தங்களுக்கு சொந்தமானது என இரு தரப்பினரும் உரிமை கொண்டாடினர். இடம் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது தொடர்பாக யாரும் பேச வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பேனரை வைத்துக் கொள்ளுங்கள் என கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினரையும் மண்டபத்திற்கு அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியல் காரணமாக தென்னூர் பகுதியில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments are closed.