வருகிற மே மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் கடுமையான கூட்டணி வியூகத்தை வகுத்துவருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அ.இ.அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தலைமையின் கீழ் கூட்டணி ஏற்பட்டு, நான்கு முனை போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் திமுக மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி உடன்பாட்டில் முன்னிலை வகித்துவருகிறது. அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சிகளான முஸ்லிம் லீக்கிற்கு இராமநாதபுரம் தொகுதியையும், கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கி அறிவிப்பும் வெளியாகிவிட்டது. ஆனாலும் காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட இன்னும் பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டவில்லை. இந்நிலையில் திமுக – மதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூக நிலைக்கு வந்திருப்பதாக தெரிகிறது. அதன்படி மதிமுகவுக்கு 1 + 1. அதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியும், ஒரு ராஜ்ஜிய சபா சீட்டும் வழங்க திமுக தலைமை சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ள ஒரு தொகுதி அநேகமாக திருச்சியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் தற்போதைய திருச்சி சிட்டிங் எம்.பி காங்கிரசை சேர்ந்த சு.திருநாவுக்கரசர். இவருக்கு எதிராக தொகுதி முழுவதும் அதிருப்தி அலை வீசுகிறது. சொந்த கட்சிக்காரர்களிடம் கூட திருநாவுக்கரசரால் நல்ல பெயர் எடுக்க முடியவில்லை. இவருக்கு மீண்டும் சீட் கொடுத்து, ஓட்டு கேட்டு சென்றால், பொதுமக்கள் இவரை கல்லால் அடித்து துரத்தும் நிலைகூட உருவாக வாய்ப்புண்டு. 1% வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்ட திமுக தலைமை திருச்சியை மதிமுகவுக்கு என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அப்படி மதிமுக போட்டியிடும் நிலையில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ தான் திருச்சி தொகுதி வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது. இத்தொகுதியை பொறுத்தவரை மதிமுகவும் கட்சி ரீதியாக வலுவாகவே இருக்கிறது. மருத்துவர் ரொகையா, வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி.சேரன், மாத்தூர் கலியமூர்த்தி என ஏகப்பட்ட அபார தேர்தல் வேலை செய்யும் தளகர்த்தர்கள் உள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், இதே திருச்சி தொகுதியில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.