திருச்சியில் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் என இரண்டு பஸ் நிலையங்கள் உள்ளன. இருந்தாலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.380 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. அந்தத் தொகையில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று ( 24.06.2023 ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்றைய தினம் எடமலைப்பட்டி புதூர், அரியமங்கலம், லால்குடி ஆகிய 3 இடங்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் வாயிலாக ஏறத்தாழ 5000 பேர் பலன் அடைவர். இந்த முகாம்களில் 33 வகையான நோய்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முகாமிலும் தலா 100 மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.
பஞ்சப்பூரில் ரூ.380 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே ஜனவரி மாதத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோன்று மார்க்கெட் வருவதற்கான பணியும் செய்து வருகிறோம்.
குடமுருட்டியிலிருந்து கோரை ஆறு வரை சிமெண்ட் சாலை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து நிதிக்காக காத்திருக்கிறது. பஞ்சப்பூரில் 10 ஏக்கரில் ஐ.டி.பார்க் வரவுள்ளது. பஞ்சப்பூரில் நெடுஞ்சாலை துறை சார்பாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கத்திபாரா பாலம் போல் அமைக்க உள்ளோம். ரூ.300 கோடி செலவில் சாக்கடை நீரை சுத்திகரித்து மீண்டும் வாய்க்காலில் விடப்படும். திருச்சியில் மெட்ரோ ரயில் வர ஆய்வு செய்து இருக்கிறார்கள். இதன் காரணமாக அண்ணா சிலை முதல் ஜங்ஷன் வரையிலான மேம்பால பூர்வாங்க பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ரூ.1500 கோடி செலவில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையப் பணிகள் மாநகராட்சி நிதியிலிருந்து செலவிடப்படவில்லை அரசு முன்னரே ஒதுக்கிய தொகையிலிருந்தே செலவிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.