Rock Fort Times
Online News

வாக்கி டாக்கி பற்றாக்குறையால் அல்லல்படும் திருச்சி மாநகர காவல்துறை- புதிதாக வாங்கிக் கொடுக்க திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்…!

மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர். கிஷோர்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்ன தான் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இந்தோனேசியாவிலுள்ள தீவிரவாதியை இந்தியாவிலிருந்தே அலேக்காக டிரேஸ் செய்யும் தொழில் நுட்ப வளர்ச்சியை தமிழக காவல்துறை பெற்றிருப்பினும் திருச்சி தில்லைநகர் முதல் கிராசில் செயின் ஸ்நாசிங் செய்யும் திருடனை பதினொன்றாவது கிராசில் மடக்கி பிடிக்க போலீசாருக்கு பேருதவியாக இருப்பது என்னவோ நமது உள்ளூர் வாக்கி டாக்கி தான். ஆனால் இந்த வாக்கி டாக்கிகள் திருச்சி மாநகரில் பெரும்பாலான காவல் நிலையங்களில் பயன்படுத்த முடியாத அளவிற்கு செயலிழந்துள்ளதாகவும், குறிப்பாக பீட்(ரோந்து) போலீசார் பயன்படுத்தும் பழைய வாக்கி டாக்கிகள் பழுந்தடைந்துள்ள சூழலில் புதிதாக வாக்கி டாக்கிகள் திருச்சி மாநகர காவல் துறையால் வழங்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி மாநகரில்  14 சட்டம்- ஒழுங்கு காவல் நிலையங்கள் மட்டுமல்லாது, குற்றப்பிரிவு, போக்குவரத்து ஒழுங்கு பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, விபச்சார தடுப்பு பிரிவு, சைபர் குற்ற தடுப்பு பிரிவு உள்ளிட்ட ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு பிரத்யேக வாக்கி டாக்கி மற்றும் கமிஷனர் முதல் இணை மற்றும் துணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் 65க்கும் மேற்பட்ட மாநகர ரோந்து போலீசாருக்கு என பிரத்யேக வாக்கி டாக்கிகள் திருச்சி மாநகரில் பயன்பாட்டில் உள்ளது.

இந்த வாக்கி டாக்கிகள் அவ்வப்போது பழுதாகும் பொழுது திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள டெக்னிக்கல் செக்சனில் கொடுத்து பழுது நீக்கி தரப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வாக்கி டாக்கிகளுக்கு பதிலாக புதிதாக வாக்கி டாக்கி வழங்காமல் உள்ளதாக தெரிய வருகிறது. உதாரணத்திற்கு ஒரு காவல் நிலையத்தில் ஐந்து பீட்கள் உள்ளது என்றால் ஐந்து வாக்கி டாக்கிக்கு பதிலாக, ஒன்று அல்லது இரண்டு வாக்கி டாக்கிகள் மட்டுமே சுழற்சி முறையில் பயன்படுத்த படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு அவசர தகவலை ஒரே நேரத்தில் ஆணையர் முதல் கடைநிலை காவலர் வரை உடனடியாக சென்று சேர்ப்பது தான் வாக்கி டாக்கியின் சிறப்பம்சம். ஆனால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு காவல்துறை தலைவர் அந்தஸ்தில் செயல்படுவதோடு பல லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஒரு மாநகரில் காவல்துறையின் இந்த குறைபாடு வேதனையளிக்கிறது. மேலும், சாமானிய குடிமகனாக யோசிக்கும் பொழுது மிகப்பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழக முதல்வரின் சீறிய தலைமையின் கீழ் செயல்படும் தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு இயக்குநர் சங்கர்ஜிவால், திருச்சி மாநகர காவல் துறையில் ஏற்பட்டுள்ள வாக்கி டாக்கி பற்றாக்குறையை விரைந்து சரிசெய்து, திருச்சி மாநகர பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

🔴LIVE : திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பணிகள் ஆய்வு அமைச்சர் கே.என். நேரு பேட்டி

1 of 916

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்