Rock Fort Times
Online News

திருச்சி ஜங்ஷன் பழைய ரயில்வே பாலம் ஓரிரு நாளில் இடிப்பு, ரூ.138 கோடியில் புதியபாலம்: அமைச்சர் கே.என்.நேரு…!

திருச்சி ஜங்ஷன் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில்  கட்டப்பட்ட இந்த பாலத்தின் வழியாக கே.கே.நகர், ஓலையூர், விமான நிலையம், துப்பாக்கி தொழிற்சாலை, எடமலைப்பட்டிபுதூர், போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் அருகிலேயே மற்றொரு பாலம் கட்டப்பட்டு இருந்தாலும் இந்த பாலம் தான் போக்குவரத்துக்கு பிரதானமாக உள்ளது. இந்த பாலம் மிகவும் பழுதடைந்து உள்ளதால் அதனை இடித்துவிட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக  ரூ.138 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பூமி பூஜையும் போடப்பட்டது. இந்த நிலையில் இந்த பழைய பாலம் ஓரிரு நாளில் இடிக்கப்பட்டு புது பாலம் கட்டுமான பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அந்த பாலத்தை ஒட்டி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பழக்கடைகள்,  ஜூஸ் கடைகள் இடித்து அகற்றப்பட்டன.  இந்தநிலையில் தமிழக நகராட்சி  நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  இன்று(21-09-2024) சம்பந்தப்பட்ட  பாலத்தைப் பார்வையிட்டார்.  பின்னர்,  திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து ஜங்ஷன் அரிஸ்டோ ரவுண்டானா வரை போக்குவரத்து மாற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்,  மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,  மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி மீனாட்சி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.  அப்போது திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம், பகுதி செயலாளர் கமால் முஸ்தபா, பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், சேர்மன் துரைராஜ், கவுன்சிலர்கள் மண்டிசேகர், கலைச்செல்வி, புஷ்பராஜ், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அஹமது  மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்,  திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான பணிகள் இன்னும் ஓரிரு நாளில் துவங்க உள்ளது. இதன் காரணமாக எடமலைப்பட்டி புதூரில் இருந்து வரும் வாகனங்கள், சென்னையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் எந்த வழியாக செல்ல வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்