Rock Fort Times
Online News

சென்னை, தாம்பரம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்: வி.சி.க.நிர்வாகி வெட்டி படுகொலை…!

சென்னை, தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் என்ற மைனா குட்டி( வயது 37). இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் இன்று,(28-08-2026) திருநீர்மலை அம்பேத்கர் சிலை பகுதியில் உள்ள திமுக மண்டல
அலுவலகம் அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், அன்பழகனை சரமாரியாக வெட்டிவிட்டு. அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், அன்பழகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கர் நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த அன்பழகனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் அரங்கேறிய இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட அன்பழகன் என்ற மைனா குட்டி மீது மூன்று கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்