Rock Fort Times
Online News

திருச்சி ஏர்போர்ட்டிற்கு கூடுதல் வசதிகள் வேண்டும் – மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சரை 4 எம்.பிக்களோடு சந்தித்த திருச்சி எம்.பி. துரை வைகோ…!

மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை பெரம்பலூர் எம்.பி. கே.என்.அருண் நேரு, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கரூர் எம்.பி.ஜோதிமணி, தஞ்சாவூர் எம்.பி.முரசொலி ஆகியோருடன் திருச்சி எம்.பி.துரை வைகோ நேரில் சந்தித்து திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய கட்டிடத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக பயன்பாட்டிற்கு வந்தது. கூடுதல் பயணிகளின் வருகைக்காகவே இந்தப் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. கூடுதல் விமான சேவைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போதிய ஓடுதள வசதி இல்லை. ஆகவே, விமான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க தேவையான நிதியை வழங்குமாறு கோரிக்கை வைத்தோம். இரண்டாவதாக, இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் (BASA) படி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை வழங்கிட அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மட்டுமே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. வாராந்திர சேவை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு 3,760 இருக்கைகள் மட்டுமே இந்த விமானத்தில் நிரப்பப்படுகின்றன. இதனால், பயணக் கட்டணமும் பல மடங்கு அதிகமாக உள்ளது.

ஆகவே, வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் பெங்களூரு, சென்னை, கொச்சின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமான சேவையை பயன்படுத்துகின்றன. இதனால், திருச்சி விமான நிலையத்திற்கு வர வேண்டிய வருவாய் பெங்களூரு, கொச்சின் போன்ற விமான நிலையங்களுக்கு சென்று விடுகின்றன. எனவே, திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும்.
இதன்மூலம் பொதுமக்கள் பயனடைவதோடு திருச்சி விமான நிலையத்திற்கு வருவாயும் அதிகரிக்கும் என கோரிக்கை வைத்தோம். அதேபோல, திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இல்லை. ஆகவே, டெல்லியில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து கொச்சினுக்கும் விமானங்களை இயக்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால், திருச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்ட மக்களுக்கும் பயனளிக்கும். நாங்கள் தெரிவித்த கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றித் தருவதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார் என கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்