தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் 18-ந்தேதி காவிரி கரையோர மாவட்டங்களில் இந்த விழா ஆண்டாண்டு காலமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அகண்ட காவிரி பாயும் திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டும். கடந்த ஆண்டு அம்மா மண்டபத்தின் 12 படிக்கட்டுகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து சென்றது. இதன் காரணமாக காவிரியில் புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.

ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் காவிரி ஆறு வறண்டு காணப்படுகிறது. நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், ஆடிப்பெருக்கு விழாவையும் மக்கள் கடந்த ஆண்டைப்போல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இருந்தாலும், ஆடிப்பெருக்கு நாளான இன்று (ஆகஸ்ட் 3) சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்து வருகிறார்கள்.

புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு, புனித நீராடி வழிபாடு செய்வது உண்டு. தற்போது காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் குட்டை போல தண்ணீர் சிறிதளவே தேங்கி நிற்கிறது. அந்தத் தண்ணீரும் துர்நாற்றம் வீசுகிறது என்பதால் யாரும் குளிக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு அம்மா மண்டபம் படித்துறையில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள ‘ஷவரில்’ பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பக்தர்களின் வசதிக்காக அம்மா மண்டபம் படித்துறை பகுதியில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றுக்குள் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.