தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியவில்லை- * இபிஎஸ்க்கு திமுக கடும் கண்டனம்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரை தரக்குறைவாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை எடப்பாடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியாது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றவர் மு.க.ஸ்டாலின். மருத்துவமனைக்கு நேரடியாக சென்று கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கேட்டறிந்தவர். தனது உயிரை துச்சமென மதித்து தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞரின் மகன்தான் ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் உயிருக்கு பயந்தவர் அல்ல. திமுக ஆட்சியில்தான் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. பரப்புரையில் எப்படி பேசவேண்டும் என்ற இலக்கணத்தை மீறி பழனிசாமி பேசி வருகிறார். கொரோனா காலத்தில் வெளியே வர பயந்தவர்தான் பழனிசாமி. இத்தனை மலிவான அரசியல் இதுவரை தமிழ்நாட்டில் நடந்தது இல்லை. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் உண்மையை மூடி மறைத்தவர்தான் எடப்பாடி. உயிரைப் போக்கும் மனப்பான்மை இன்னும் எடப்பாடி பழனிசாமிக்கு போகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.