பேச்சிலே ‘அறம்’ இல்லை, இவரெல்லாம் எப்படி அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார்?* சேகர் பாபுவை விளாசிய அமைச்சர் ரமேஷ்..!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று(14-09-2026) மலைக்கோட்டை கோவிலுக்கு வருகை தந்து விநாயகரை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வரின் லண்டன் பயணம் குறித்து சிலர் தவறான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். அரசியல் ரீதியாக, கருத்தியல் ரீதியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். வீட்டில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டில் ஏதாவது ஒன்றைச் சொல்லி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்து கூறுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனைவரும் பாராட்டக் கூடிய வகையில் தமிழக முதல்வர் தெளிவான ஒரு ஆட்சியை நடத்தி வருகிறார். நடிகரும், அவருடைய நெருங்கிய நண்பருமான அஜித் கலந்து கொள்ளும் ரேஸ் பந்தயத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதில் என்ன தவறு இருக்கிறது. எதிர்க்கட்சியினர் விமர்சனத்திற்காக ஏதாவது ஒன்றை கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறார்கள். திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரையும், அமைச்சர்களையும் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி உள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முதல்வரை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார். ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. ஆனால் ஆபாசமாக, அவதூறாக இழிவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, அவதூறாக பேசுவது, ஆபாசமாக பேசுவது, அமைச்சர்களை கொச்சைப்படுத்தி பேசுவது போன்ற வேலையை தான் செய்து வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் பொறுப்புணர்வோடு பேச வேண்டும். சேகர்பாபு பேச்சிலே ‘அறம்’ இல்லை. நீங்கள் எப்படி அறநிலையத்துறை அமைச்சராக இருந்தீர்கள். மூன்று மாதத்தில் மட்டும் இந்த சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. அனைத்து பிரச்சனைகளுக்கும் சட்ட ரீதியாக நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

Comments are closed.