இந்திய நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்கின்றன. இதில், முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் மற்றொரு கூட்டணியும் தேர்தலை சந்திக்கின்றன. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை வெற்றி என்பது எந்த கட்சிக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது என்றே தெரிகிறது. காரணம் அந்த அளவுக்கு மூன்று கூட்டணி கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனித்து 39 தொகுதிகளிலும் வலம் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங் மற்றும் முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் படையெடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை(17-04-2024) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதன்பிறகு, அமைதி பிரச்சாரம் உட்பட எந்த விதமான பிரச்சாரத்துக்கும் அனுமதி இல்லை. தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.