ஆரூரா, தியாகேசா’ பக்தி கோஷம் விண்ணதிர பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த திருவாரூர் ஆழித்தேரோட்டம்…!
திருவாரூர் தியாகராஜர் கோவில், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பழமை வாய்ந்த தலமாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க இக்கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை உடையது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின்போது ஆழித்தேரோட்டம் நடைபெறும். ஆழி என்றால் கடல். கடல் போன்ற பெரிய தேர் என்பதை குறிக்கவே ஆழித்தேர் என்று அழைக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம். அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடி. விமானம் வரை தேர் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி உயரம் 48 அடி. விமானம் 12 அடி, தேர் கலசம் 6 அடி என மொத்தம் 96 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறது ஆழித்தேர். திருச்சி பெல் நிறுவனம் ஆழித்தேருக்கு இரும்பு அச்சுகள், நான்கு இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் வசதி உள்ளிட்டவற்றை அமைத்து தந்துள்ளது. அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 350 டன்னாகும். நான்கு வீதிகளிலும் தேர் அசைந்தாடி திரும்பும் அழகை காண கண் கோடி வேண்டும். மிக பிரமாண்டமான ஆழித்தேரில் தியாகராஜர் வீற்றிருந்து வலம் வருவார். இவ்வாறு பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தேர் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் இன்று(07-04-2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூர் மட்டுமின்றி தஞ்சாவூர் போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் ஒன்று கூடி ‘ஆரூரா, தியாகேசா’ பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக காலை 5.30 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. ஆழித்தேரோட்ட விழாவுக்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Comments are closed.