Rock Fort Times
Online News

மாணவர்களை, ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது – தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு…!

ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்களை உடல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ எவ்வித துன்புறுத்தலும் செய்யக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் குப்புசாமி, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் மாணவர்களின் நற்பண்புகள் மற்றும் செயல்பாடுகளை ஆக்கப்பூர்வமாக வழிநடத்திட வேண்டும். தினமும் காலை வணக்கக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த சமயத்தில், விளையாட்டு மைதானத்தில், அனைத்து மாணவர்களையும் வரிசையாக அவர்களின் உயரங்களின் அடிப்படையில் நிற்க வைத்து, தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் ஆகியவற்றை பாட செய்ய வேண்டும். ஒலிப்பெருக்கியை பயன்படுத்தி பாடல்களை ஒலிபரப்பக் கூடாது. பின்னர், அன்றைய தின செய்தித்தாள்களில் வெளியாகி இருக்கும் கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த சாதனைகள், தேர்வு அட்டவணை, விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகள் போன்ற செய்திகளை, மாணவர்கள் அறியும் வகையில் வாசிக்க வேண்டும். பள்ளி மாணவர்களிடையே சாதி – சமூக வேறுபாடுகளை களைந்து, நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களிலும் பெண் உதவியாளர் இருக்க வேண்டும். பள்ளி சொத்துக்களை கல்விசாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது. வகுப்புவாதம், சாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை பள்ளி வளாகங்களில் நடத்தக் கூடாது. ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை உடல் ரீதியாகவோ உளவியல் ரீதியாகவோ எவ்வித துன்புறுத்தலும் செய்யக்கூடாது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்