Rock Fort Times
Online News

தச்சங்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய காளையர்கள்…!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, இந்தாண்டு இன்று (ஜன.3) தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழாக் குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தனா். இதையடுத்து, இன்று போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள திடலை மாவட்ட ஆட்சியா் மு.அருணா அண்மையில் நேரில் பாா்வையிட்டு வாடிவாசல், விழா மேடை, காளைகள் ஓடுதளம், பாா்வையாளா்கள் மாடம் ஆகியவற்றை பார்வையிட்டார். இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டி இன்று (சனிக்கிழமை) காளியம்மன் கோயில் முன்பாக அமைக்கப்பட்ட வாடிவாசலில் நடைபெற்றது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, ப துக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து கலந்து கொண்டுள்ளனர். விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்து ஜல்லிக்கட்டு உறுதிமொழியினை வாசித்தார். ஜல்லிக்கட்டு போட்டியை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். இதில் சில காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டி துள்ளி குதித்து ஓடின. சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்கிக் கொண்டன. ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட மிதிவண்டி , மின்விசிறி, எவர்சில்வர் அண்டா, கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தின் முதலாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்