Rock Fort Times
Online News

லண்டனில் காரை ஏற்றி தமிழக வாலிபர் கொலை: மகனின் உடலை தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை…

கோவை மருதமலை ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் பட்டாபிராமன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவரது மகன் விக்னேஷ்(35). இவர் கடந்த சில ஆண்டுகளாக கத்தார் நாட்டில் உணவக மேலாளராகப் பணியாற்றி வந்தார். அங்கிருந்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் லண்டன் சென்ற அவர், அங்குள்ள ரீடிங் என்ற பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த பிப்.14 ம் தேதி பணி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிச் சென்ற போது, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் விக்னேஷ் மீது காரை ஏற்றி கீழே தள்ளி அவரை கொடூரமாகத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில், படுகாயமடைந்த விக்னேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்த லண்டன் போலீஸார், இவ்வழக்கில் 8 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன் உயிரிழந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், விக்னேஷ் உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு சென்னையில் உள்ள அயலக நலத் துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதால் அது முடிந்ததும் உடலை அனுப்பி வைப்பதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவதால் விக்னேஷ் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்