Rock Fort Times
Online News

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேடயமாக திகழும் தமிழக அரசின் “இமைகள் திட்டம்” – திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பாராட்டு

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேடயமாக திகழும் வகையில் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள இமைகள் திட்டத்திற்கு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘சமூகப் பூந்தோட்டத்தின் அரும்புகள் தான் நம் செல்லப் பெண் குழந்தைகள். இந்த அரும்புகளை, நாளை, வண்ண மலர்களாக மலர்ந்து சமூகத்தை மணக்கச் செய்பவை. எனவே அந்த அரும்புகளை கருகாமல் பாதுகாத்து, அவை மலர்ந்து வாசம் வீச செய்வது நம் கடமை. அந்த வகையில், பெண் குழந்தைகளை கண்களைப் போல் காத்து வரும் தளபதி அரசு, ‘இமைகள்’ எனும் மகத்தான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க, அரண் அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் மூலம், பாலியல் கொடுமையால் ஒரு பெண் குழந்தை பாதிக்கப்பட்டால், அக்குழந்தைக்கு உடனடி சிகிச்சை, மனநல ஆலோசனை வழங்கப்படும். முனைப்புடன் விசாரணை நடத்தப்பட்டு, 60- நாட்களில் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்படும் குழந்தைக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு கிடைக்கும் வகையில், கூர்மையான பாதுகாப்பு வாள் போன்று இந்த ‘இமைகள்’ திட்டம் செயல்படும். அத்துடன் , இச்சமூகத்தில் இது போன்ற குற்றங்களை தடுக்க, பள்ளிக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்கள், வீதி நாடகங்கள் நடத்தி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும் இதன் மூலம் பெண் குழந்தைகள் முழு சமூகப் பாதுகாப்பு பெறுவர். வரும் காலத்தில், அவர்கள் பன்முக திறன் கொண்ட வலிமையான பெண்களாய் இச்சமூகத்தில் வலம் வருவர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்