Rock Fort Times
Online News

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் கலைஞர் அறிவு சார் நூலகம்- அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…!

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார். இதனைதொடர்ந்து நூலகம் அமைப்பதற்கான அடிப்படை பணிகளை பொதுப்பணித்துறை செய்ய தொடங்கியது. இதில், முதற்கட்டமாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் 7 தளங்கள் கொண்டதாக இந்த நூலகத்தை அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது. இந்தநிலையில், நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கி உள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ‘காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்’ என அறிவித்திருந்தார். அதனை செயல்படுத்தும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அரசாணையின் மூலம் வழங்கியுள்ளார். திருச்சி மாவட்ட மக்களின் சார்பாகவும், டெல்டா மாவட்ட இளைஞர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களின் சார்பாகவும் தமிழ்நாடு முதல்- அமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்