கடந்த 10 ஆண்டுகால பாஜக அரசால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை- துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்…!
திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சித்தாநத்தத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சமுத்திரம், மறவனூர், கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி, மொண்டிப்பட்டி, பெரியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும்
மாலை ஸ்ரீரங்கம், மேலூர், மூலத்தோப்பு, வடக்குவாசல், கீழவாசல், அம்பேத்கர் நகர், நெல்சன் ரோடு மற்றும் அந்தநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் வீதி, வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார்.
முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,‘‘துரைவைகோ எம்பியாக வெற்றி பெற்றால் மத்திய அரசில் இருந்து அனைத்து நன்மைகளும் திருச்சிக்கு கிடைக்கும். இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் மணப்பாறை சிப்காட் உணவுப்பூங்கா, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மத்தியில் பத்தாண்டு காலம் ஆட்சி செய்த பாஜக அரசால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஐஎன்டிஐஏ கூட்டணி வெற்றி பெற்றால், திட்டங்கள் நமக்கு வந்து சேரும். பாஜ அரசு 100 நாள் வேலை திட்டத்தை 30 நாளாக குறைத்துவிட்டது. மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து துரைவைகோ பேசுகையில்,‘‘இந்த தேர்தலில் டில்லியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், வரக்கூடாது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். ஸ்ரீரங்கத்துக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நான் வெற்றி பெற்றால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன். கடந்த 3 ஆண்டுகளில் ஸ்ரீரங்கம் நகரத்துக்கு தேவையான புதிய பஸ் நிலையம், புதிய சாலைகள், காவிரி கூட்டு குடிநீர் திட்டம், காவிரியின் குறுக்கே புதிய பாலம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை முழுமையாக வழங்காததால் மேலும் பல திட்டங்களை செயல்படுத்தவில்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல் காந்தி பிரதமர் ஆனால் தமிழகத்திற்கு உரிய நிதி கிடைக்கும். அதன்மூலம் ஸ்ரீரங்கம் உட்பட தமிழகத்திற்கான திட்டங்களை செயல்படுத்தலாம். கல்வி கடன், பயிர்க்கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை ஐஎன்டிஐஏ கூட்டணி அளித்துள்ளது. ஆகவே, எனக்கு ‘தீப்பெட்டி’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்’’, என்றார். பிரச்சாரத்தில், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளரும், மேயருமான அன்பழகன், பழனியாண்டி எம்.எல்.ஏ, பகுதி செயலாளர் ராம்குமார், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட திமுக, மதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று ஆதரவு திரட்டினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.