திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ: உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு…!
திருச்சி மன்னார்புரம் வீட்டு வசதி குடியிருப்பு அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில், ஒரு வீட்டில் திருமண விழா முடிந்ததையடுத்து விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்காக வீட்டின் சமையலறை யிலேயே இரண்டுக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்புகளை வைத்து சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் பகுதியில் தீப்பற்றியுள்ளது. சிறிது நேரத்தில் மள மளவென தீ பற்றி எரியத் தொடங்கி யுள்ளது. இதனால், அங்கிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில், திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிலிண்டரில் பிடித்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். பின்னர், கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.