Rock Fort Times
Online News

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையை எளிதாக்க அதிநவீன நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் அறிமுகம்…! 

மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சையை எளிதாக்க நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நரம்பியல் மருத்துவர் எஸ்.பசல் இலாஹி., “மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகளை மிகத் துல்லியமான வழிகாட்டுதலை வழங்கும் நவீன இமேஜ் கைடட் சர்ஜரி தொழில்நுட்பமான நியூரோ நேவிகேஷன் மூலம் சிக்கலான நரம்பியல் சிகிச்சைகளை கூட எளிதாக கையாள முடியும். குறிப்பாக மூளையில் ஏற்பட்டுள்ள கட்டிகளை இதன் மூலம் மிகத் துல்லியமாக கண்டறிந்து பாதுகாப்பாக அகற்றுவதோடு மூளையின் முக்கிய செயல்பாட்டு பகுதிகளை பாதுகாத்து துல்லியமான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். மூளை மண்டை ஓட்டு பகுதி மற்றும் தண்டுவட பகுதிகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளை அதிக பாதுகாப்புடன் மேற்கொள்ள முடியும். அறுவை சிகிச்சைக்கான சரியான பாதை கோணம் மற்றும் ஆழத்தை இந்த கருவி மூலம் துல்லியமாக கண்டறிந்து விரைவான சிகிச்சையளிக்க முடியும். மிக முக்கியமாக சாதாரணமாக செய்யப்படும் அறுவை சிகிச்சைகளை போல முழு மண்டை ஓட்டு பகுதிகளையும் துளையிடாமல் எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அந்த பகுதியை மட்டும் நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் மூலம் கண்டறிந்து அந்த பகுதியில் மட்டும் துளையிட்டு சிகிச்சை அளிக்க முடியும். இதன்மூலம் நோயாளிகள் விரைவாக நலம் பெற முடியும்” என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சையது அலி, மயிலன் சின்னப்பன், செந்தில்குமார் ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். இதில்,திருச்சி அப்போலோ மருத்துவமனை அசோசியேட் துணைத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்