ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் தைத்திருநாள் உற்சவம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தை மாதத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இருந்து தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு தைமாத சீர் வழங்கும் வைபவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் சமயபுரம் மாரியம்மன், தைப்பூச தினத்தன்று சமயபுரத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநெடு உபயங்கள் கண்டருளி ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் வட காவிரியில் தீர்த்த வாரி கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து இரவு அம்மனுக்கு பட்டுபுடவைகள், மஞ்சள், குங்குமம், வளையல், பூ, பழங்கள், கரும்பு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் உள்ளடக்கிய சீர்வரிசை பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் பட்டாச்சாரியார்கள் குழுவினரால் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து கோவிலில் இருந்து மேளதாளம் மற்றும் வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்து வந்து சமயபுரம் கோவில் இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டது. பின்னர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் சார்பில் வழங்கப்பட்ட சீர் வரிசைகள் மற்றும் பட்டுப்புடவை அணிந்து சமயபுரம் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி…பராசக்தி… என கோஷமிட்டு வழிபட்டனர்.
Comments are closed.