தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக கடந்த 27ம் தேதி ஸ்பெயின் நாட்டில் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (07-02-2024) சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு திமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் முதல்வர் கூறுகையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்பெயின் பயணம் சிறப்பாக அமைந்தது. ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளை எடுத்துரைத்தேன். ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஹபெத் லாய்டு ரூ.2,500 கோடி, எடிபன் நிறுவனத்துடன்
ரூ.540 கோடி, ரோகா ரூ.400 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை சர்வதேச நாளேடுகள் பாராட்டி உள்ளன. காற்றாலை மின் உற்பத்தி, நீர் மறுசுழற்சியில் முன்னணியில் உள்ள ஆக்சியானா நிறுவனம், பீங்கான் பொருள் உற்பத்தி நிறுவனமான ரோகா நிறுவனம், ரயில்வே சார்ந்த உற்பத்தி நிறுவனம் டால்க்கோ, பொறியியல் வடிவமைப்பு பயிற்சிக்கான எடிபான் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து பேசினேன். இவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் முதலீடுகளைச் செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதனால் 3 ஆயிரத்து 440 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. மக்களவை தேர்தலுக்குப் பிறகே அடுத்த வெளிநாட்டுப் பயணம் அமையும் என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையைப் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். பாஜகதான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும் பிரதமர் பேசியுள்ளார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி கைப்பற்றும் என்று அவர் கூறியிருக்கிறார். மொத்தம் 400 தானா, 543 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று அவர் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன். மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன் என்றார்.
1
of 927
Comments are closed, but trackbacks and pingbacks are open.