சிறுவனுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!( வீடியோ இணைப்பு)
இன்றைய நவீன யுகத்தில் தொழில்நுட்பம் அபரிமித வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக செல்போன்களில் ஏகப்பட்ட தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. தங்களது தகவல்களுக்கும், வீடியோக்களுக்கும் “லைக்” கிடைக்க வேண்டும் என்பதற்காக பல பேர் தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து தடுத்து வந்தாலும் இது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிறுவனை மது குடிக்க வைத்து அதனை வீடியோ எடுத்து “இது என்னுடைய அண்ணன் மகன்” என்ற வாசகத்துடன் அந்த வீடியோ ஓடுகிறது. அந்த வீடியோ திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், அவரது சகோதரர் அண்ணன் மகனான ஆறிலிருந்து ஏழு வயதுக்குள் இருக்கும் சிறுவன் முன்பு மது அருந்துகிறார். பின்னர் அந்த மதுவை அந்த சிறுவனுக்கும் கொடுத்து குடிக்க செய்து இறைச்சியை ஒருவர் எடுத்துக் கொடுக்க அந்த சிறுவன் சாப்பிடுகிறான். மேலும், அந்தச் சிறுவன் மது அருந்தும்போது அருகிலேயே பீர் பாட்டிலையும் ஒருவர் வைக்கிறார். இவ்வாறு அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவை ஆட்டோ டிரைவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலர், சிறுவர்கள் மது அருந்தக்கூடாது என அரசு பலமுறை எச்சரித்தாலும் ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இந்த வீடியோவை மற்ற சிறுவர்கள் பார்க்கும்போது அது தவறான முன் உதாரணமாகி விடும். ஆகவே, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.