Rock Fort Times
Online News

ஆணவப் படுகொலைகளை தடுக்க விரைவில் தனிச்சட்டம்: அமைச்சர் வன்னி அரசு…!

ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்காக வருகிற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனிச்சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக
சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார். மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டியிலும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியிலும் சாலையில் சென்றவர்கள் மற்றும் திருமண வீட்டில் இருந்தவர்களை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி காயப்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் வன்னி அரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “சாலையில் சென்றவர்களை சரமாரியாக வெட்டி காயப்படுத்திய சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். அவர்களின் வலியும், வேதனையும் எங்களுக்கு புரிகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் வேலைக்குச் சென்று திரும்பிய இளைஞர்கள். ஆலங்குளம் அருகே நெட்டூரில் புறக்காவல் நிலையம் அமைக்கவும், துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பெண் படை போன்று, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனிப்படை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்கனவே முன்
வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். கோயில்கள், பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகள் அகற்றப்பட்டதைப் போல, வன்கொடுமை பிரச்சனைகள் அதிகம் நிகழும் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றுவது குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என நான் கோரிக்கை வைத்திருந்தேன். இதுகுறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என வன்னி அரசு தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்