அரசு மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை…* சுகாதாரத்துறை எச்சரிக்கை !
அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வராமல் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் வராத நேரத்தில் மருத்துவம் படிக்காத ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.
அதில், அரசு மருத்துவமனைகளில் உள்ள துறை மருத்துவர்கள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் 12 மணி வரை நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க பணிக்கு வருவது கட்டாயம். உள் நோயாளிகள் பிரிவை கண்காணிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி அடிப்படையில் பணியில் இருக்க வேண்டும். மற்ற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும். மருத்துவ அதிகாரியான ஆர்.எம்.ஓ.
காலை 7 மணி முதல் மருத்துவமனை செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் காலை 8 மணி முதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பல் மருத்துவம் மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு காலை 8 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வருவது அவசியம்.
மருத்துவப் படிப்போ அல்லது செவிலியர் பயிற்சியோ பெறாத தூய்மைப் பணியாளர்களை எக்காரணம் கொண்டும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவோ, ஊசி போடவோ அனுமதிக்கக்கூடாது. தகுதியற்ற நபர்கள் சிகிச்சை அளிப்பது சட்டப்படி குற்றமாகும் மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருந்துகொண்டு சிகிச்சைக்கு தூய்மை பணியாளர்களை பயன்படுத்துவதும் பணிக்கு வராமல் தூய்மை பணியாளர்களை முதலுதவி செய்ய வழிகாட்டுவதும் தவறானது. நோயாளிகள் தரப்பில் புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறை சார் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் செயல்பாடு தொடர்பாக 104 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.