அரசியல் ரேசில் முந்தும் சீமான்- பிப்.21ல் திருச்சியில் நடக்கும் மாநாட்டில் 234 நா.த.க. வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கிறார்…!
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் சீமான் தனித்தே களம் காண்கிறார். அதற்கான வேட்பாளர்களையும் படிப்படியாக அறிவித்து வருகிறார். இந்நிலையில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள ஆலம்பட்டிபுதூர் பகுதியில் பிப்ரவரி 21ம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடக்கிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மாநாட்டு பணிகளை இன்று (பிப்.18) கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டதோடு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மற்ற கட்சிகள் மாநாடு போன்று எங்கள் மாநாடு இருக்காது. மாநாட்டில் தேர்தல் அறிக்கை என்பது கிடையாது. எங்கள் ஆட்சி எப்படி இருக்கக் போகிறது என்பதற்கான மாநாடாக தான் இருக்கப் போகிறது. மாற்றத்தை விரும்பும் மாநாடாக இருக்கப்போகிறது. வணங்குவதற்கு ஆயிரம் கடவுள் இருக்கிறார்கள், வாழ்வதற்கு இந்த பூமி உள்ளது. இந்த பூமியை காக்க போவது யார் என்பதை உணர்த்துவதற்கான மாநாடாக இருக்கப்போகிறது.அன்றைய தினம் 234 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளேன். நான் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள். அன்று முதல் எங்கள் தேர்தல் பயணத்தை தொடங்க போகிறோம். தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருக்கும்போது ஒரே நாளில் 6500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மகளிர் உரிமை தொகை மற்றும் கூடுதலாக கோடைகால தொகை கொடுத்தது மிக பெரிய கொடுமையாக பார்க்கிறேன். தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார். *மக்கள் சந்திப்பு பயணத்தை தற்போது நிர்வாகிகள் சந்திப்பு பயணம் என்று விஜய் மாற்றி உள்ளார் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, தம்பியை குறை சொல்வது என் வேலையில்லை. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் என் தம்பியிடம் தான் கேட்க வேண்டும். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறோம் வலுவாக இருக்கிறோம் என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதால்தான் இதுபோன்று அவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியிலே திமுக மட்டுமே வலுவாக இருக்கிறது. அவர் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டால் அந்த கூட்டணி இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.