1 முதல் 5-ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு…!
மழலையர்களுக்கு சாக்லேட் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்..
கோடை விடுமுறைக்குப் பின்னர், இம்மாதம் ஜீன் 1- ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், ஒன்று முதல் 5 -ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. அப்போது மழலையர்கள் சிலர் உற்சாகமாக வகுப்பறைகளுக்கு வந்தனர். ஆனால் சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்து அழுதன. பள்ளிக்கு வருகை தந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஆசிரியர்கள் சாக்லேட் கொடுத்து வரவேற்றனர்.

ஒரு சில இடங்களில் மேளதாளம் முழங்க மாணவ-மாணவிகள் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். பள்ளிகள் திறப்பு நாளான இன்றே அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இலவச உபகரணங்களையும் இன்றே வழங்க அறிவுறுத்தியுள்ளது. இதனால், பாடப்புத்தகங்களை வழங்க அனைத்து பள்ளி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்தன. இலவச பஸ் பாசை பொறுத்தவரை சீருடை அணிந்து வரும் மாணவர்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு இந்த ஆண்டு சற்று காலதாமதமாக தொடங்குவதால் அதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.