சக்தி தலங்களில் முதன்மையாக கருதப்படுவது, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் பூச்சொரிதல் விழா மற்றும் சித்திரைத் தேர் பெருவிழா சிறப்பு வாய்ந்தது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து 28 நாட்கள் உலக மக்கள் நன்மைக்காக அம்மனே இங்கு பச்சைப் பட்டினி விரதம் இருப்பது தனிப்பெரும் சிறப்புக்குரியது. பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்ளும் மாரியம்மனுக்கு தளிகை நெய்வேத்தியங்கள் படைக்கப்படாது. மாறாக, இளநீர், நீர்மோர், பானகம், கரும்புச்சாறு, துள்ளு மாவு போன்றவை மட்டுமே பிரசாதமாக படைக்கப்படும். உலக மக்களுக்காக பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்ளும் அம்மனை குளிர்விக்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்கள் எடுத்து வரப்பட்டு மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் நிறைவுச் செய்யும் நாளில், சித்திரை பெருவிழா தேரோட்ட கொடியேற்றம் நடைபெறும். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா முன்னேற்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கூறுகையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா முக்கிய திருவிழாவாகும். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூச்சொரிதல் விழா நடைபெறும் 10ம் தேதி, காவல்துறையினர் பக்தர்கள் கோவிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். மேலும் , முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்று கண்காணிக்க வேண்டும். தடை இன்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.