திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய 3 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் மணப்பாறையில் துணை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், திருச்சி கிழக்கு அலுவலக கட்டுப்பாட்டில் திருவெறும்பூர் அலுவலகமும், ஸ்ரீரங்கம் அலுவலக கட்டுப்பாட்டில் துறையூர், முசிறி மற்றும் லால்குடி துணை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்குதல், புதிய, பழைய வாகன பதிவுகள் புதுப்பித்தல் மற்றும் தொடர்புடைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வட்டாரப் போக்குவரத்து (ஆர்.டி.ஓ) அலுவலகத்தை நாடுகின்றனர். இந்நிலையில் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு வட்டாரப் போக்கவரத்து அலுவலகங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாகவே உள்ளன. எனவே வேறு அலுவலகங்களில் பணியாற்றி வரும் அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் பணியாற்றி வருகின்றனர்.
அதுபோல திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம் அலுவலகங்கள் மற்றும் திருவெறும்பூர் உள்ளிட்ட துணை அலுவலகங்களிலும் போக்குவரத்து ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஓட்டுனர் உரிமம் மற்றும் சான்றிதழ்கள் பெறுவதற்கு வாரக்கணக்கில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக சர்வதேச ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பர்மிட் உள்ளிட்ட பணிகள் ஆர்.டி.ஓ. ஒப்புதலின்றி நடைபெறாது. வெளிநாடுகளில் ஓட்டுநராக பணியாற்றச் செல்வோருக்கு இது மிக முக்கியம்.
எனவே விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோல திருச்சி மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் எல்லைகள் பிரித்தபோது, வருவாய் வட்டத்தைக் கருத்தில் கொண்டு பிரிக்கப்பட்டதால் தொடர்புடைய பணிகளுக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ள புங்கனூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, இனாம்குளத்தூர் மற்றும் மேற்கு அலுவலகம் அமைந்துள்ள பிராட்டியூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு தொடர்புடைய பணிகளுக்காக மேற்கு அலுவலகத்தை கடந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுக வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை தான் மற்ற வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் இது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.