‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக இந்த மாவட்டங்கள் வெள்ள காடாக மாறியது. மழை, வெள்ள சேத பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசு ரூ.5,060 கோடி நிதியை முதல் கட்டமாக வழங்க வேண்டும் என்றும், வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, மத்திய அரசு தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.450 கோடியை வழங்கியது.
மேலும், வெள்ள , சேத பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜநாத்சிங் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தநிலையில் வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு இன்று ( 12.12.2023 ) தமிழகம் வந்துள்ளது. பின்னர் அந்தக் குழுவினர் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளா் சிவ்தாஸ் மீனாவுடன் ஆலோசனை நடத்தினர். வருவாய்துறை, நிதித்துறை உள்ளிட்ட துறைகளில் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை, குணா சத்தியமூர்த்தி என்ற அதிகாரி தலைமையில், .மத்திய வேளாண்மை, நெடுஞ்சாலை, நிதி, ஊரக வளர்ச்சி, மின் துறைகளைச் சேர்ந்த 5 அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். இக்குழுவினர், வருகிற 13ம் தேதி வரை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்துக்கு மேலும் வெள்ள நிவாரண நிதி கிடைக்கும் என்று தெரிகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.