கடந்த 8 ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படாதது, மகளிர் இலவச பயண அறிவிப்பு போன்றவற்றால், தனியார் பேருந்து தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘எனவே, பேருந்து கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தியும், தனியார் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பயணத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், அதற்கான கட்டணத்தை அரசு வழங்க கோரியும், நாளை (செப் 30) ஒரு நாள் தனியார் பேருந்துகள் ஓடாது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.தங்கராஜ் அறிவித்திருந்தார். இதனால் தனியார் பேருந்துகளை நம்பி இருக்கும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி கூறிய நிலையில் ஸ்டிரைக் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தங்கராஜ் இன்று (செப் 29) வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர் தொடர்பு கொண்டு எங்களது முக்கிய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்த வகையில் நாளை (செப் 30) நாங்கள் அறிவித்துள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பது என்று முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.