குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகை- 30-ம் தேதி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம்…!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக நவம்பர் 27ம் தேதி தமிழகம் வருகை தருகிறார். 27ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை, சூலூர் விமானப்படை தளத்துக்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி சென்று அங்குள்ள ராஜ்பவனில் ஓய்வெடுக்கிறார். நவம்பர் 28ம் தேதி, சாலை மார்க்கமாக குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்குச் சென்று அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மத்தியில் குடியரசு தலைவர் உரையாற்ற உள்ளார். பின்னர் மீண்டும் ராஜ்பவன் வந்து தங்குகிறார். 29ம் தேதி ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியின மக்களைச் சந்திக்க உள்ளார். 30-ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்குச் செல்லும் அவர், அங்கிருந்து திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் செல்கிறார். அங்குள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உள்ளார். அங்கிருந்து திருச்சி வந்தடையும் அவர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை கமிஷனர்கள் விவேகானந்த சுக்லா, செல்வகுமார் ஆகியோர் ஹெலிபேடு மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் விமான நிலைய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குடியரசுத்தலைவர் முர்மு, முதல் முறையாக வருகை தருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
Comments are closed.