“ஏற்கனவே இருந்த கோயிலை இடித்து விட்டு தான் மசூதி கட்டப்பட்டது”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதிலடி…
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவை கோனியம்மன் கோயிலை தூய்மைப்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர். இதில், கலந்துகொண்ட அந்த கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும், தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாகுபாடு இல்லாமல் அனைத்து கோயில்களிலும் தூய்மை பணி நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஆன்மிக பேரலை எழுந்துள்ளது. கோயில் விவகாரத்தில் அரசியல் பேசக்கூடாது என நினைக்கிறேன். அமைச்சர் உதயநிதி, மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். உதயநிதிக்கு ஒரே ஒரு பதிலை கூறிக் கொள்கிறேன். அங்கிருந்த கோயிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், ராமர் கோயில் அழைப்பிதழை நேரில் வாங்கவில்லை.
ஆனால், அவரது மனைவி அழைப்பிதழை வாங்கி நேரில் வருவதாக உறுதி அளித்துள்ளார். மனைவி, மகன் என வேறு வேறு அரசியல் வழியில் திமுகவினர் செல்கின்றனர். பல்வேறு ஆன்மீக மடங்களில் சமய அடையாளம் உள்ள திருவள்ளுவர் படம் உள்ளது. அதனைத்தான் பாஜக பயன்படுத்துகிறது.
திருவள்ளுவர் சமய சார்பற்றவர் என்றால் திருக்குறளில் எத்தனை இடங்களில் விஷ்ணு, லஷ்மி பற்றி வந்துள்ளது தெரியவில்லையா?, திருக்குறளை அவர்கள் ஒழுங்காக படிக்கவில்லையா?. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு அனைத்தும் கோயிலோடு தொடர்புடையது. அதனை யாராலும் மறுக்க முடியாது.
சாமி கும்பிடாமல் காளைகளை அவிழ்த்து விடுவதில்லை. மதசார்பின்மை என்ற பெயரில் இந்து கலாச்சாரத்தை சீரழிப்பதை திமுக, கம்யூனிஸ்டுகள் வேலையாக கொண்டுள்ளனர். அரசு, அனைத்து மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.