Rock Fort Times
Online News

”கிராண்ட் செஸ் டூர்” ரூ.1.90 கோடி பரிசுடன் இந்தியாவின் ‘நம்பர் 1’ வீரரானார் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா…* முதல்வர் விஜய் வாழ்த்து..!

உலகளாவிய சதுரங்க விளையாட்டின் மிக உயரிய மற்றும் மதிப்புமிக்க தொடர்களில் ஒன்றாகக் கருதப்படுவது ‘கிராண்ட் செஸ் டூர்’ (Grand Chess Tour). சர்வதேச அளவில் மிகச்சிறந்த ரேட்டிங் புள்ளிகளைக் கொண்ட டாப்-10 கிராண்ட்மாஸ்டர்கள் மட்டுமே பங்கேற்கும் தனித்துவமான தொடர் இது. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான கிராண்ட் செஸ் டூர் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இத்தொடரின் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவும், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ காருவானாவும் பலப்பரீட்சை நடத்தினர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், பிரக்ஞானந்தா 15-13 என்ற புள்ளிக்கணக்கில் ஃபேபியானோ காருவானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தார். இந்த அசத்தல் வெற்றியின் மூலம், கிராண்ட் செஸ் டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார். இத்தொடரின் சாம்பியன் கோப்பையுடன், அவருக்கு 2,00,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1.90 கோடி) பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மேலும், இந்த அபார முன்னேற்றத்தின் மூலம் அவர் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கிராண்ட் செஸ் டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

முதல்வர் விஜய் வாழ்த்து,

பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவு க்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவு க்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மனஉறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க மனமார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்