Rock Fort Times
Online News

2 போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு…!

கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியில் ரவுடி கோபி தலைமையிலான ஒரு குழுவிற்கும், ஆனந்தராஜ் தலைமையிலான மற்றொரு குழுவிற்கும் இடையே “யார் பெரியவர்?” என்ற ‘கேங் வார்’ மோதல் நீண்டநாட்களாக நடந்து வந்துள்ளது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த 16-ம் தேதி நெய்வேலியில் மது அருந்திக் கொண்டிருந்த ஆனந்தராஜ் குழுவினர் மீது கோபியின் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் நரேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மேலும் ஆனந்தராஜ் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இக்கொலை சம்பவத்திற்கு பிறகு தலைமறைவான கோபியைப் பிடிக்கக் கடலூர் மாவட்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடலூர் முத்தாண்டிக்குப்பம் பகுதியில் ரவுடி கோபி பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். கோபி பதுங்கியிருந்த பகுதியைச் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்ய முயன்றனர். அப்போது, காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருக்க ரவுடி கோபி திடீரென தான், வைத்திருந்த அரிவாளால்
போலீசாரை கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார். இத்தாக்குதலில் நெய்வேலி காவல் நிலையக் காவலர்களான பாண்டியராஜன் மற்றும் விஜயசோழன் ஆகிய இருவருக்கு பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. தன் சக காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்ட நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில், தற்காப்பிற்காகவும் ரவுடியைப் பிடிக்கவும் தனது துப்பாக்கியால் உடனடியாகச் சுட்டார். இதில் ரவுடி கோபியின் இடது காலில் இரண்டு குண்டுகள் பாய்ந்து அவர் சுருண்டு விழுந்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி கோபி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ரவுடியின் தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் பாண்டியராஜன் மற்றும் விஜயசோழன் இருவரும் என்.எல்.சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுட்டுப் பிடிக்கப்பட்ட கோபி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்