பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் போலீஸ் அதிகாரி ஒருவர் ஆட்டோ டிரைவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலையான போலீஸ் அதிகாரி டல்பீர் சிங் தியோல். காவல்துறையில் இணைவதற்கு முன்பு பளுதூக்கும் வீரராக இருந்தவர். அர்ஜுனா விருது பெற்ற இவர், காவல்துறையில் இணைந்து திறம்படச் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில்தான், தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், கால்வாய் ஒன்றின் அருகே சடலமாகக் கிடந்திருக்கிறார். டல்பீர் சிங் தியோல் சிங்கின் உடலை, அந்த வழியாகச் சென்ற போலீஸ்காரர் ஒருவர் பார்த்து, அதிர்ச்சியடைந்திருக்கிறார். சம்பவம் தொடர்பாக உயரதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவிக்க, அந்தப் பகுதியில் போலீஸார் குவிந்தனர்.
உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, விசாரணையை முடுக்கிவிட்டனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் டல்பீர்சிங் தியோல், ஆட்டோ ஒன்றில் ஏறிச் செல்வது தெரிய வந்தது. அந்த வாகனத்தின் எண்ணை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸார், ஆட்டோ டிரைவர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் , போலீஸ் அதிகாரி டல்பீர்சிங் தியோலைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று, டல்பீர் சிங் தியோல் அந்த நபரின் ஆட்டோவில் சென்றிருக்கிறார். டல்பீர்சிங் தியோல் தன்னுடைய கிராமத்தில் இறக்கிவிடுமாறு ஆட்டோ , டிரைவரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபர் மறுக்கவே, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், டல்பீர் சிங் தியோலின் கைத்துப்பாக்கியை எடுத்து, அவரின் தலையில் சுட்டிருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே டல்பீர் சிங் தியோல் இறந்துபோனார். அதையடுத்து பயந்துபோன அவர், அந்த துப்பாக்கியை டல்பீர் சிங் தியோலின் உடலருகே போட்டுவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. கொலை நடந்த 48 மணி நேரத்தில் போலீஸார் குற்றவாளியைக் கைது செய்திருக்கின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.