சேலம் மாவட்டம், எடப்பாடி காவல் நிலையத்தில் வழக்கம்போல காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். உடனே, காவலர்கள் வெளியே வந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. இந்த பெட்ரோல் குண்டு வீச்சால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும் இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சேலத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் விசாரணை நடத்தப்பட்டது. காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார்?, எதற்காக வீசினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.