Rock Fort Times
Online News

பழனி கோயில் நில மோசடி வழக்கு: முக்கிய குற்றவாளிகள் 4 பேர் ஒரே நாளில் கைது…!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான, அடிவாரப் பகுதியில் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் மடத்து நிலத்தை வெறும் ரூ. 2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, பப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை (60), திண்டுக்கல் மாவட்டம் , பழனி தாலுகா, கவுண்டன்குளம் ஏ.சி.சி. சாலை பகுதியைச் சேர்ந்த அன்வர் தீன் (65), விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு காமராஜர் நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முருகதாஸ் (56) ஆகிய மூவரை இன்று(29-07-2026) காலை போலீசார் கைது செய்தனர். இதில், வெள்ளத்துரை, கோயில் நிலத்தை முறைகேடான போலி ஆவணங்கள் மூலம் தன் பெயருக்குக் கிரயம் (வாங்குதல்) செய்து கொண்ட வர். முருகதாஸ் கோயில் நிலம் தனக்கு சொந்தமானது என போலியான ஆவணங்களைத் தயாரித்து, அதை வெள்ளைத்துரைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்தவர். அன்வர் தீன் போலிப் பத்திரப்பதிவு மற்றும் பணப் பரிவர்த்தனைகளுக்கு உடந்தையாக இருந்து, மோசடிக்குத் துணையாகச் செயல்பட்டவர் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பழனி அருகே டி.கே.என். புதூரைச் சேர்ந்த சேதுபதி என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். வெள்ளைத்துரையுடன் இணைந்து கூட்டாளியாக இந்த நிலத்தை வாங்கியவர் சேதுபதி. இந்த நால்வர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்