Rock Fort Times
Online News

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்பு!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள வேத பாடசாலையில் பயிலும் நான்கு சிறுவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கிய சம்பவத்தில் ஒரு சிறுவன்  பலியான நிலையில் மற்ற இரண்டு சிறுவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சிறுவனின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.. திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஆண்டவன் வேத பாடசாலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி வேத பாடங்களை பயின்று வருகின்றனர். வழக்கமாக அதிகாலை நேரங்களில் இங்கு பயிலும் மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க செல்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நேற்று ( 14.05.2023 ) காலை யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்ற 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார் . மேலும் அச்சிறுவனுடன் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஆந்திராவை சேர்ந்த அபிராம் (வயது 13), மன்னார்குடியை சேர்ந்த ஹரி பிரசாத் (வயது 14) ஆகியோரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். விரைந்து நீரில் தேடிய தியனைப்பு துறையினர் கோபால கிருஷ்ணன் என்கிற சிறுவனை மட்டும் உயிருடன் மீட்டனர். இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு அங்கு சலவை செய்யும் தொழிலாளர்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினார். அங்கு சிறுவர்களை இழந்து நிற்கும் பெற்றோர்களிடம் பாடசாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார், இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அங்கு ஆய்வு செய்து கொண்டிருந்த நிலையில் மேலும் ஒரு சிறுவனின் ( ஹரிபிரசாத் ) உடல் மீட்கப்பட்டுள்ளது.. கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் சுழல் பகுதிகள் உள்ளதால் விடுமுறை நாட்களில் மாணவர்கள் குளிக்க செல்வதை தடுக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீரில் மூழ்கிய ஒரு சிறுவனை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்..

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்