தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பாமூரு நோக்கி தனியார் சுற்றுலா ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று(மார்ச் 26) காலை 6.30 மணியளவில் ஆந்திர மாநிலம் மார்காபுரம் மாவட்டத்தின் ராயவரம் பகுதி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது. லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டுமே தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் பேருந்துக்குள் சிக்கிக்கொண்ட பயணிகளில் 14 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். பலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் உடனடியாக விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மார்காபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 14 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Comments are closed.