Rock Fort Times
Online News

ஓம் சக்தி….பராசக்தி….கோஷம் விண்ணதிர சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்- லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!

தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம். இக்காலங்களில் அம்மனுக்கு பக்தர்களால் பூச்சொரிதல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமை தைதேரோட்டம் விமரிசையாக நடைபெறும். அதன்படி அம்மன் பட்டினி விரதம் முடிந்து, சித்திரை தேர்திருவிழா கடந்த ஏப்ரல் 7 -ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்பாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின், முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(16-04-2024) விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, காலை 10-31 மணிக்கு மிதுன லக்னத்தில் திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார்.

 

பின்னர் 11 மணிக்கு சிவாச்சாரியார்கள் கொடியசைக்க திருத்தேரினை லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன்பின்னர் மூலஸ்தானத்திலிருந்து அம்மன்(உற்சவர்) புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் வெள்ளத்தில் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் பின்னர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்