பணிப் பாதுகாப்பு, சமவேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளா் சங்கத்தினர் சென்னையில் நேற்று (05-10-2026) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் செவிலியர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்கு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா? பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு, தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி, ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை. இப்படி முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதல்வர் விஜய்யும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா? போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என ரீல்ஸ் செய்து தனது விர்ச்சுவல் அபியூசர்கள் மூலம் ட்ரண்ட் செய்து விளம்பரம் தேடுவாரா?” எனப் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது இன்றைய தவெக அரசின் காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம் என்பது கொடூரத்தின் உச்சம். ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு பின் அதற்கு மாறான செயல் என்பது தான் மாற்றமா? தனது துறையைச் சார்ந்த செவிலியர்கள் போராடுவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு வார்த்தை பேசினாரா? போராடும் இடத்தில் மின்சாரத்தை துண்டிப்பது, பேச்சுவார்தை எனக் கூறி அழைத்து சென்று கைது செய்வது என மிகவும் கீழ்த்தரமாக ஒரு போராட்டத்தை அணுகியுள்ள இன்றைய ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.