Rock Fort Times
Online News

திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓட்டு வேட்டை…!

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கிழக்கு தொகுதிக்குட்பட்ட கல்லுக்குழி, ராமகிருஷ்ணா நகர், உலகநாதபுரம், காஜா நகர், மங்கம்மாள் சாலை, ஐயப்ப நகர், சபரி மில், ஐயர் தோட்டம், சாத்தனூர், கவிபாரதி நகர், உடையான்பட்டி சந்தை, தென்றல் நகர், கே.கே. நகர், காந்தி நகர், ஆர்.எஸ். புரம், ஜே.கே. நகர், திலகர் திடல், செம்பட்டு, காவிரி நகர், ஸ்டார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரசாரத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று துரை வைகோவுக்கு ஆதரவு திரட்டினர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:- திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டே முக்கால் ஆண்டுகளில் திருச்சிக்கு மட்டும் ரூ.3 ஆயிரம் கோடியில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய பேருந்து முனையம், சரக்கு வாகன முனையம், காய்கனி வளாகம், 3 இடங்களில் உயர்மட்ட பாலம், மெட்ரோ ரயில் திட்டம், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம், தகவல் தொழில்நுட்ப பூங்கா, விளையாட்டுத் திடல், காவிரியின் குறுக்கே புதிய பாலம் என எண்ணற்றத் திட்டங்கள் திருச்சிக்கு கிடைத்துள்ளன. இந்தத்திட்டங்ளுக்கு மத்திய அரசு எந்த நிதியும் தரவில்லை. பேரிடர் காலத்தில் வழங்க வேண்டிய நிதியை கூட வழங்கவில்லை. அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியையும் வழங்காமல் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் நிதி வழங்கவில்லை. இதனால், கிராமப்புறத்தில் 30 நாள்களுக்கு வேலை கிடைப்பதே அரிதாகிவிட்டது. தமிழகத்திற்கு கடும் நிதிநெருக்கடியை கொடுத்தாலும், மக்களுக்கான திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைந்தால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருக்கும். எனவே, துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், பெண்களுக்கான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வரின் கரத்தை மேலும் வலுப்படுத்த, நமக்கு அணுசரணையான அரசு மத்தியில் அமைய வேண்டும். அப்போதுதான், நமக்கான நிதியை முழுமையாக கேட்டுப் பெற முடியும். எனவே, திருச்சி தொகுதி மக்கள் தீ்ப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து துரை வைகோவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

பிரச்சாரத்தில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட மதிமுக செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று ஆதரவு திரட்டினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்