நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 48 வயதுடைய, 2020ல் நேரடி டி.எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்ட ஒருவர், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவருடன் அவ்வப்போது வந்து தனிமையில் இருப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தார் நேற்று நள்ளிரவு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள வீட்டில் டி.எஸ்.பி.,யும், பெண் போலீசும் தனியாக இருந்தபோது வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு திருச்சி மாவட்ட காவல் துறை அதிகாரிகள் வந்து கதவைத் திறந்து அவர்களை வெளியே வருமாறு அழைத்துள்ளனர். அப்போது அந்த பெண் போலீஸ், கையில் கத்தியை வைத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். போலீசார் அவரிடம் பேசி டி.எஸ்.பி.,யை வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவர், ‘என்ன அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போல சோதனைக்கு வந்துள்ளீர்களா? யாரிடம் நான் பேச வேண்டும், ஐ.ஜி.,யிடமா, எஸ்.பி.,யிடமா’ என்றும், நான் லீவில் இருக்கிறேன். இது என் பர்சனல் மேட்டர் என்றும் கூறி, வந்த போலீசாரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அதற்கு அதிகாரிகளோ, பெண் வீட்டார் புகார் கூறியதாலேயே வந்தோம், விசாரிக்க வேண்டியது எங்களது கடமை என்று கூறி அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் விசாரித்தபோது, ‘‘இருவரும் சம்மதித்து தான் ஒன்றாக இருக்கிறார்கள் என்றாலும், குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பும் போது, அதை விசாரிக்க வேண்டியது எங்களின் கடமை. இப்பிரச்னையில் துறைரீதியாக மட்டுமே விசாரிக்க முடியும். ‘டிசிப்பிளின் போர்ஸ்’ என போலீஸ் துறையை கூறுவர். அதில் இப்படி ஒரு சிலர் ஒழுக்கக்கேடாக நடப்பது காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அந்த டி.எஸ்.பி.க்கு டாக்டர் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் இதேபோல், பல பெண்களிடம் தொடர்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் விடுமுறை கிடைப்பதே கஷ்டம். டவுன் டி.எஸ்.பி., எப்படி விடுமுறையில் வந்தார் என்று தெரியவில்லை. அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.