சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சமீபத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். பின்னர் அவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என்றும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகளில் 2 நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி, செந்தில்பாலாஜி கைது சட்டப்படியானது, நீதிமன்ற காவல் சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கது அல்ல, சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது எனவும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள் நீதிமன்ற காவலில் அமலாக்க துறையினர் விசாரிக்கலாம் என்று அனுமதி அளித்தது. அதன்படி, சென்னை புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் நேற்று சாஸ்திரி பவனுக்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்தினர். இன்று காலை மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. அமலாக்கத்துறை விசாரணை நடப்பதால் சாஸ்திரி பவன் வளாகத்தை சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயார் நிலையில் ஆம்புலன்சும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சட்டவிரோதமாக வெளிநாட்டில் ஏதும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.