Rock Fort Times
Online News

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 20 நாட்கள் கட்டாய மருத்துவக் கண்காணிப்பு தேவை..

காவேரி மருத்துவமனை தரப்பில் தகவல்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால், அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.மருத்துவர்களும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 15-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில், மருத்துவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தபடி, அவருக்கு கடந்த 21-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திட உணவுகள் வழங்கபடுவதாகவும், நடை பழகிட தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும், அவர் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப 15 முதல் 20 நாட்கள் ஆகலாம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதுவரை அவர், மருத்துவமனையில், மருத்துவர்கள் கண்காணிப்பில் தான் இருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்