அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீடுகளில் நேற்று ( 13.06.2023 ) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள , அமைச்சரின் அறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஒமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்த்து உடல்நலம் விசாரிப்பதற்காக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி நலமாக இருக்கிறார். இது பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கை. இந்த உருட்டல், மிரட்டல்களுக்கு தி.மு.க.அரசு அஞ்சாது. அமைச்சர் மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்” என்று கூறினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் கே.என்.நேரு, நிருபர்களிடம் கூறுகையில், செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் அறை துணை ராணுவப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரது உடல்நிலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்து கண்காணித்து வருகிறார்.செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை. காத்திருந்து அனுமதி வாங்கிய பின் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன் என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த பிறகு அமைச்சர் பொன்முடி கூறுகையில் டெல்லி, கர்நாடகத்தை தொடர்ந்து தமிழகத்திலும் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. திமுக கடந்த காலங்களில் பல அடக்குமுறைகளை சந்தித்துள்ளது. இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல என்றார்.
அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி , ஐ.சி.யு.வில் சுய நினைவில்லாமல் உள்ளார். நான்கு, ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை. அவர் காது அருகே வீக்கம் உள்ளது. நிச்சயமாக துன்புறுத்தப்பட்டிருப்பார். அவர் கண் திறந்து பதில் சொன்ன பிறகு தான் என்ன நடந்தது என தெரியவரும். இந்த சலசலப்புக்கெல்லாம் திமுக அஞ்சாது என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.