திருச்சியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு…- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி, காஜாமலையில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று(25-02-2026) நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன. முன்பதிவு செய்யப்பட்ட மாடுபிடி வீரர்கள் அணி, அணியாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் திமிறி கொண்டு ஓடின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள், தங்க நாணயம், பாத்திரங்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல வீரர்களின் பிடியில் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்கழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகர காவல் ஆணையர் என்.காமினி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், காஜாமலை விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.