முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.12,449.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 57 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, ஸ்ரீரங்கத்தில் ரூ.11 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம், ரூ.125 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா, 2000 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா மற்றும் ரூ.176 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ( 15.12.2023 ) நடைபெற்றது.
விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு முடிவடைந்த திட்ட பணிகளை தொடங்கி வைத்ததோடு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. அந்தவகையில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திருச்சியின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாநகராட்சிக்கு மட்டும் ரூ. 2600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். நகரத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என்கிற சட்டம் இருந்தது. அதனை கருணாநிதி மாற்றி அனைவருக்கும் பட்டா வழங்க உத்தரவிட்டார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.45 கோடியில் கூட்ட அரங்கம் கட்ட உள்ளோம். திருச்சி மாவட்டத்தில் மருங்காபுரி, முசிறி, மணப்பாறை, துறையூர் தொகுதிகளில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 3 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 107 இடங்களில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் 7 1/2 கோடி பேருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில், கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெறும். சுதந்திரம் பெற்ற பின்பு 70 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு மட்டுமே கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்றார். விழாவில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,
அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.